தமிழ்நாடு

நீட் ஊழலின் மையம் குஜராத்..!

நாட்டையே உலுக்கியுள்ள நீட் ஊழலின் மையமாக குஜராத் மாநிலம் உள்ளதாக சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஜெய் ஜலாராம் பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் மூலம் நடப்பாண்டு நீட் தேர்வில் மிகப்பெரும் முறைகேடு உள்ளிட்ட ஊழல் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் நீட் முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி வலுவான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் மட்டுமின்றி, வடஇந்திய மாநிலங்களிலும் நீட் ஊழலை எதிர்த்து ஆவேசமிக்க போராட்டங்கள் எழுந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம் காரணமாக மோடி அரசு நீட் தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணையில், பாஜக ஆளும் மாநிலங்களிலேயே முறைகேடு சம்பவங்கள் பெரிய அளவிற்கு அரங்கேறியுள்ளது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், நீட் ஊழலின் மையமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக குஜராத் மாநிலத்தின் பஞ்ச் மஹால் மாவட்டத்திற்குட்பட்ட கோத்ராவில் ஏற்கெனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில், சனியன்று கோத்ரா உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணை முடிவில் கோத்ராவின் ஜெய் ஜலாராம் பள்ளி, நீட் முறைகேட்டின் மைய மாக இருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெய் ஜலாராம் பள்ளியின் முதல்வர் தீட்சித் படேல், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.10 லட்சம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். பணம் இந்த விசாரணை முடிவில் கோத்ராவின் ஜெய் ஜலாராம் பள்ளி, நீட் முறைகேட்டின் மையமாக இருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெய் ஜலாராம் பள்ளியின் முதல்வர் தீட்சித் படேல், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.10 லட்சம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். பணம் அளித்த மாணவர்களின் பெற்றோர் அளித்த வாக்கு மூலங்களின் அடிப்படையில் தீட்சித் படேல் ரூ.2.5 கோடி வரை வாரிச் சுருட்டியுள்ளது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து சனியன்று நள்ளிரவு தீட்சித் படேல் மற்றும் ஜெய் ஜலாராம் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஞாயிறன்றும் தொடர் விசாரணை நடைபெற்றது.

“நீட் முறைகேட்டின் மையமாக கூறப்படும் குஜராத்தின் ஜெய் ஜலராம் கல்வி அறக்கட்டளை ஒன்றிய பாஜக அமைச்சர்களுக்கு நெருக்கமான நிறுவனம்” என குஜராத் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான சக்தி சிங் கோஹில் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”குஜராத்தின் ஜெய் ஜலா ராம் கல்வி அறக்கட்டளை நடத்தும் பள்ளி தான் நீட் முறைகேட்டின் மையம். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆளுநர் ஆனந்திபென் படேல் (தற்போது உத்தரப்பிரதேசம்) உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு இந்த அறக்கட்டளைத் தலைவர் மிகவும் நெருக்கமானவராக உள்ளார். கடந்த காலங்களில் பல விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்ட இந்த பள்ளிக்கு, நீட் தேர்வு மையம் எப்படி ஒதுக்கப்பட்டது? என குஜராத் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” எனவும் கூறினார்.

பஞ்ச்மஹால் மாவட்டத்தின் புறநகர் பகுதியான கோத்ராவில் உள்ள ஜெய் ஜலாராம் பள்ளியில் நீட் முறைகேடு அரங்கேறியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார். ஆனால் குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஜெய் ஜலாராம் பள்ளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 40 நாட்களுக்கு பிறகு பஞ்ச்மஹால் மாவட்ட ஆட்சியரின் குற்றச்சாட்டு ஆதாரத்தின் அடிப்படையிலேயே சிபிஐ அதிகாரிகள் “ஜெய் ஜலாராம் பள்ளி தான் நீட் முறைகேட்டின் மையம்” என்று கூறியுள்ளனர். இதன் மூலம் நீட் ஊழல் குற்றவாளிகளுக்கு குஜராத் பாஜக அரசு துணை போனதும் அம்பலமாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button