தமிழ்நாடு

ஜி.பி.எஸ்., முறையில் ஜனவரி முதல் சுங்க வசூல்?

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில், சுங்க கட்டணம் வசூலிக்க, ‘பாஸ்டேக்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் வங்கிகள், பணப் பரிமாற்ற வங்கிகள் வாயிலாக, ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன.வாகனங்கள் செல்லும்போது சுங்கச்சாவடிகளில் உள்ள மின்னணு கருவி வாயிலாக, வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழித்து கொள்ளப்படுகிறது.

இதன் வாயிலாக வாகனங்கள் காத்திருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாகனங்களின் காத்திருப்பு தொடர்கிறது. பாஸ்டேக் நடைமுறை தோல்வி அடைந்துள்ளதால், வெளிநாடுகளில் உள்ளது போல, ஜி.பி.எஸ்., முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக, சுங்கச்சாவடிகளின் அருகில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட உள்ளன. வாகனங்கள், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக அடையாளம் காணப்பட்டு, சுங்கக் கட்டணம், வங்கிக் கணக்குகளில் இருந்து கழித்துக் கொள்ளப்பட உள்ளது. இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சுங்க கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்லவும் அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், சோதனை முறையில் அடுத்த ஆண்டு ஜனவரியில், இந்த திட்டத்தை பல்வேறு சுங்கச்சாவடிகளில் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து உள்ளது. இதற்காக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் உள்ள 10 சுங்கச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button