செய்திகள்தமிழ்நாடு

நீர் நிலை ஆக்ரமிப்புகள் நீக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.டி.ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் ரயில்வே நடைபாதை கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். நடைபாதை கட்டுமானப் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் இருப்பதால், தடை விதிக்கக் கூடாது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என எச்சரித்தனர்.

நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே ஆகியவற்றின் வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது என்றாலும் அவை இயற்கை வளங்களையும், நீர் வளங்களையும் ஒட்டுமொத்தமாக பாதிப்பதாக இருக்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையைச் சார்ந்தது? நடைபாதை கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் தெற்கு ரயில்வே மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button