தமிழ்நாடு

செலுத்திய டெபாசிட் தொகையை கரண்ட் பில்லில் கழித்து கொள்ள மின்வாரியம் திட்டம்

நுகர்வோர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை அடுத்த EB பில்லில் கழிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான தொகை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. கூடுதலாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த டெபாசிட் தொகை வசூலிக்கப்படும். இந்த தொகைக்கு மின்வாரியம் 4 சதவீத வட்டியும் வழங்குகிறது.

டெபாசிட் தொகையைவிட மின்சாரம் பயப்படுத்துவதற்கான கட்டணம் அதிகரிக்கும் போது கூடுதலாக இந்த டெபாசிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பது குறித்து அஞ்சல் மூலமாகவோ, பதிவு செய்யப்பட்ட மின்நுகர்வோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ மின்வாரியம் தகவல் அனுப்பும்.

ஆனால், தற்போது மின்கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மீட்டர் ரீடிங் அட்டையில் மின்வாரிய ஊழியர்கள் குறிப்பிடுவது இல்லை. இதனால், நுகர்வோருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, கடந்த 2 மாதங்களாக வாட்டி வதைத்த கோடை வெயில் காரணமாக வீடுகளில் ஏசி, மின் விசிறி ஆகியவன் பயன்பாடு அதிகமாகவே இருந்தது. இதனால், நுகர்வோருக்கு வழக்கத்தைவிட இந்த மாதம் கூடுதலாகவே மின்கட்டணம் வந்துள்ளது.

இந்த நிலையில், கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் நுகர்வோருக்கு கடும் நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு பெண் ஒருவர் தனது வீட்டுக்கான மின்கட்டணம் ரூ.5 ஆயிரத்தை செலுத்த சென்றுள்ளார். அப்போது அவரிடம், மின்கட்டணம் ரூ.5 ஆயிரம், மற்றும் டெபாசிட் கட்டணம் ரூ.12,500 என மொத்தம் ரூ.17,500 செலுத்துமாறு அங்கிருந்த ஊழியர் கூறியுள்ளார்.

இவ்வளவு தொகையா என அதிர்ச்சியடைந்த அந்த பெண் கடும் கண்டனம் தெரிவித்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை தொடர்ந்து, மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு மின்நுகர்வோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சமூக வலை தளங்களில் தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர்.

இதன் எதிரொலியாக , கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் தற்போது நிறுத்தியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதற்கு மின்நுகர்வோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கூடுதல் டெபாசிட் வசூலிக்க வேண்டாம் என முதல்வரும் அறிவுறுத்தி உள்ளார். எனவே, கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே நுகர்வோரிடம் வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை, அடுத்த பில்லில் கழிக்கப்படும்’ என்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button