தமிழ்நாடு

பேராவூரணி அருகே சொர்ணகாடு ரயில்வே பாதையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு அருகே ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 132 சி ரயில்வே கேட்டை, ரயில்வே நிர்வாகம் மூடிவிட்டு ரயில்வே கீழ் பாலம் அமைத்தனர்.

இந்தப் பாலம் பாம்புபோல் வளைந்து இருப்பதால் பேருந்து, டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று, பாசி படர்ந்து பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாத வகையில் உள்ளது.

இதனால் அந்தப் பாதையை பயன்படுத்தும் சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். எனவே, ரயில்வே கீழ் பாலத்தை, வாகனங்கள் சிக்கிக் கொள்ளாமல் கடந்து செல்லும் வகையில், முறையாக வடிவமைக்க வேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்தினர்.

இந்நிலையில் ரயில்வே கீழ் பாலம் அருகே உள்ள மற்றொரு இடத்தை மாற்றுப் பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த வழியாகவே பேருந்துகள், விவசாயப் பணிக்கு லாரி, டிராக்டர்கள் சென்று வந்தது. இந்நிலையில் அந்த பாதையை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தப் பாதையை பயன்படுத்தக்கூடாது என ரயில்வே துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், தொடர்ந்து இந்தப் பாதையை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 250க்கும் மேற்பட்டோர் அங்கு போராட்டம் நடத்த ஒன்று திரண்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே துறையைச் சேர்ந்த இருப்புப்பாதை முதுநிலை பகுதி பொறியாளர் பழனிவேல், இளநிலை பொறியாளர் பாலகுமாரன், ரயில்வே காவல்துறையினர் துரைசாமி, ரவி, பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி, பேராவூரணி வருவாய் ஆய்வாளர் முருகேசன், படப்பனார்வயல் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயபாஸ்கரன் (சொர்ணக்காடு), கணேசன் (வலப்பிரமன்காடு), விஜயகுமார் (மணக்காடு), பழனிமுருகன் (மாத்தூர் ராமசாமிபுரம்) சமூக ஆர்வலர்கள் மகாராஜா, மற்றும் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், இரண்டொரு நாளில் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அதில் உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து இன்று நடைபெறவிருந்த பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

– Dr. வேத குஞ்சருளன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button