தமிழ்நாடு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்! திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி, அதற்கான வழிமுறைகள் குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14-ம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

வரும் கல்வி ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த மாதம் 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது

பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.

முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பதிவேற்றம் செய்யலாம்.

இந்த திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2020 முதல் 31-7-2021-க்குள்ளும், 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2018 முதல் 31-7-2019-க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். மாணவர்களின் புகைப்படம், மாணவர், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று, வருமான சான்று, சாதி சான்று, முன்னுரிமை ஏதேனும் இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் குலுக்கல் முறையில் அடுத்த மாதம் 28-ந் தேதி அன்று அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். பெற்றோர் சேர்க்க விரும்பும் பள்ளிக்கு சென்று குலுக்கலில் கலந்து கொள்ளலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளரின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்பே சேர்க்கை வழங்கப்படும்.

மேற்கண்ட வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” இவ்வாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button