போலீஸ் செய்திகள்

கோவையில் 40 கிமீ தாண்டினால் வந்து விழும் அபராதம்… ரேடார் கேமராவை இறக்கிய போலீஸ்!

கோவை நகரில் முக்கிய சாலைகளில் அதிகபட்ச வேகத்தை போலீசார் நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதற்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் வாகன நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. முன்பு சென்னையில் மட்டுமே இருந்த இந்தப் பிரச்சினை இப்போது இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்த வாகன நெரிசல் பிரச்சினையைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இன்னுமே பல நகரங்களில் டிராபிக் என்பது முக்கிய பிரச்சினையாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னைக்கு அடுத்து மிக முக்கிய நகராகக் கோவை இருக்கிறது. ஐடி, தொழிற்துறை என்று கோவையில் பல்வேறு விதமான துறைகள் சிறப்பாக இருக்கிறது. மேலும், சர்வதேச விமான நிலையமும் இருக்கும் நிலையில், கோவையை நோக்கிப் பல நிறுவனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அண்டை மாவட்டங்களில் இருந்து பலரும் கோவைக்கு வருகிறார்கள்.

இதனால் கோவையில் முக்கிய சாலைகளில் டிராபிக் என்பது பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது. பல முக்கிய சாலைகளில் அதிலும் குறிப்பாக பீக் ஹவரில் வெளியே சென்றால் நிச்சயம் நாம் டிராபிக்கில் சிக்கிவிடும். சென்னையைக் காட்டிலும் கோவையில் டிராபிக் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோவையில் டிராபிக் பிரச்சினையைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ திட்டமும் அங்கே கொண்டு வரப்பட உள்ளது.

இதற்கிடையே கோவையில் சாலைகளில் வாகனங்களை வேகமாக இயக்குவதைத் தடுக்க புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கோவையில் அதிகபட்ச வேகமாக 40 கிமீ அறிவிக்கப்பட்டுள்ளது. 40 கிமீ வேகத்தைத் தாண்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இதற்காகக் கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் ஸ்பீடு ரேடார் பொருத்திய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதன்படி இந்த முக்கிய சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்கள் சென்றால் அவை தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு வாகன உரிமையாளருக்கு இ-சலான் அனுப்பி வைக்கப்படும். கடந்த சில நாட்களாக இது அமலில் இருக்கிறது.

இந்த 3டி ஸ்பீடு ரேடார் மூலம் ஒரே நேரத்தில் 32 வாகனங்களின் வேகத்தை நம்மால் கண்டறிய முடியுமாம்.. இரவு நேரங்களில் வாகனங்களின் ஹை-பீம்களை தாண்டி வண்டியின் எண்ணைக் கண்டறியும் நவீனத் தொழில்நுட்பமும் இதில் இருக்கிறது. 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு வாகனம் சென்றால், அதன் உரிமையாளர்களுக்கு உடனடியாக இ சலான் அனுப்பி வைக்கப்படுகிறது.

இருப்பினும், இதற்குக் கோவை மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. அவசர நேரத்தில் குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் 40 கிமீ வேகத்தைத் தாண்டாமல் வாகனத்தை இயக்க முடிவதில்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக அதிகபட்ச வேகம் என்னவாக இருக்கலாம் என்பதை நிர்ணயம் செய்ய எந்தவொரு ஆய்வறிக்கையும் இல்லாத நிலையில், போலீசார் எப்படி 40 கிமீ மேல் செல்லலக்கூடாது என்று கூறுகிறார்கள் என்றும் கோவைவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தலைநகர் சென்னையிலும் டூ வீலர், கார்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இதுபோல அதிகபட்ச வேகம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button