தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 68 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் “புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் உதவி ஆணையர் பிராங்க் டி ரூபன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், சிவகுமார் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக, S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் (01.12.2022) அன்று காலை, மடிப்பபாக்கம், ராம்நகர் 6வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்து அங்கு குட்கா புகையிலை பாக்கெட்டுகள் ரகசியமாக விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டு, மேற்படி வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த சுந்தர், சந்திரகாந்த், சக்தி ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 68 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், எம்.எடி.எம், கூலிப், ஸ்வாகத், விமல் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 5 செல்போன்கள், பணம் ரூ.17,900/- மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.