செய்திகள்தமிழ்நாடு

பேராவூரணியில் மருத்துவர் துரை நீலகண்டன் மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை

தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் மிகவும் பிரபலமானவர் எலும்பு முறிவு மருத்துவர் துரை.நீலகண்டன். இவர் பேராவூரணி பகுதிகளில் தான் படித்த பள்ளியை, தத்தெடுத்து கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளித்து வருவதுடன் சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தாய்மொழிப்பற்று நூல்கள் எழுதுவதிலும் ஆர்வம் உடையவர். இவர் பேராவூரணியில் உள்ள தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளார். இந்தத் திருவள்ளுவரின் சிலை திறப்புவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் திருவள்ளுவரின் சிலையினைத் திறந்து வைத்தார்.

சிலை திறப்புவிழா நிகழ்சியை தொடர்ந்து மருத்துவர் துரை.நீலகண்டன் எழுதிய “தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல் “என்ற நூல் வெளியீட்டு விழா பேராவூரணி எஸ்டிடி அரங்கில் நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் .என்.அசோக்குமார் நூலினை வெளியிட ,தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற பேராசிரியர் மருத்துவர் மு.குலாம்மொகிதீன் நூலினைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி விழாப் பேருரையாற்றினார்.

நூல் வெளிவர பெரிதும் துணை நின்ற ஓவியர் தஞ்சை பிரசன்னா, ஒளிப்படக் கலைஞர் பாரதி அமரேந்திரன், சுரேஷ், அசோக் ஆகியோர் நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை தலைவர் பாவலர் மு.தங்கவேலனார், திருக்குறள் பேரவை ஒருங்கணைப்பாளர் ஆறு .நீலகண்டன், முன்னாள் பேராவூரணி சட்டமற்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர், இந்திய மருத்துவக் கழக தமிழ் மருத்துவக்குழுவின் தலைவர் மருத்துவர் மு.மாரியப்பன், திருக்குறள் பேரவை நிர்வாகக்குழு உறுப்பினர் எச்.சம்சுதீன், தென்னை அரிமா சங்கத் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், அரிமா சங்கப் பொறுப்பாளர் எ.வே.காந்தி, இந்திய மருத்துவக் கழக அறந்தாங்கி கிளை பொறுப்பாளர் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி, பட்டிமன்ற நடுவர் ஆசிரியர் ஆதனூர், கோவி.தாமரைச்செல்வன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் இரா.அகிலன், பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறைப் பேராசிரியர் பா.சண்முகப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மருத்துவர் துரை.நீலகண்டன் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் த.பழனிவேல் வரவேற்றார். நிறைவாக புவனேஸ்வரி நீலகண்டன் நன்றி கூறினார்.

நிகழ்வுகளை திருக்குறள் பேரவையின் நிர்வாகக்குழு உறுப்பினர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் தொகுத்தளித்தார். விழா ஏற்பாடுகளை பேராவூரணி திருக்குறள் பேரவை முன்னின்று நடத்தியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button