போலீஸ் செய்திகள்

‘காக்கிக் கவசங்கள்’ ஒரு புதிய செயல் திட்டம்

மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


அதில் ஒரு புதிய முயற்சியாக காவல்துறை தலைவர், மத்திய மண்டலம் அவர்கள் அறிவுரையின் படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது பெற்றோர்கள் இருவரையுமே இழந்த குழந்தைகள் விவரம் சேகரிக்கப்பட்டு, அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாவலராக செயல்பட விருப்பம் தெரிவிக்கும் ஒரு காவலரை நியமிக்கும் ‘காக்கிக் கவசங்கள்’ ஒரு புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த 865 குழந்தைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்யும் பணியை செய்வதற்கு விருப்பமுள்ள காவலர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. இதற்கு விருப்பம் தெரிவித்த 555 காவலர்களிடம் தலா ஒரு குழந்தையின் பாதுகாப்பை கண்காணிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியானது காவல் நிலையங்களில் பெண்கள் உதவி குழுவில் பணியாற்றும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. காவலர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்த குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை உறுதிப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக 28.08.2021 சனிக்கிழமை அன்று கணக்கெடுக்கப்பட்ட 865 குழந்தைகளும் காவலர்களால் நேரில் சந்திக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பு குறித்து கேட்கப்பட்டதுடன் மற்றும் குழந்தைகள் கல்வியை தடையின்றி தொடர்வதற்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்புக்கென தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் பணியிட மாறுதலில் சென்றாலும் கூட அந்த குழந்தையின் பாதுகாப்பு தொடர்பான பணிகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன், வாரம் ஒரு முறை நேரில் சந்தித்தோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button