தமிழ்நாடு

நில அளவை பணிகளை விஏஓ மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு.. தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பணி தொடர்பான விவகாரங்களில் ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்ள அனுமதியளித்த அரசின் அரசாணையை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்களும் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2020ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நில அளவை பணிகளை மேற்கொள்வதற்கு என நிபுணத்துவம் பெற்று தாங்கள் அந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், எந்த வித பயிற்சியும் இன்றி கிராம நிர்வாக அலுவலர்களை நில அளவை பணியில் ஈடுபட அனுமதிப்பது சட்ட விரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, இரண்டு பதவிகளுக்கும் அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தான் எனவும் நில அளவை பணிகளை மேற்கொள்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும், சர்வே எண்களின் உட்பிரிவுடன் பட்டா வழங்கக் கோரி ஆன்லைனில் விண்ணபித்த 6 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருப்பதால், அதனை விரைந்து வழங்கும் வகையில் தான் கிராம நிர்வாக அலுவலர்கள் அளவை பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அரசின் உத்தரவை எதிர்த்து சங்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, பணி தொடர்பான விவகாரங்களில் அரசின் உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வழக்கு தொடரலாமே தவிர, அவர்களின் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button