தமிழ்நாடு

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்- : தஞ்சை கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலும், சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார் கோவில் திட்டப் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, அலுவலக வேலை நாட்களில் அணுகி பயன்பெறலாம்.

தகுதியான பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8667350694, 8667756031 மற்றும் 8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button