தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20), நர்சிங் படித்துள்ளார். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி, மூளை நரம்பியல் பிரச்சினை உடைய மாற்றுதிறனாளி. கண்ணையா கடந்த ஆண்டு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மனைவி செல்வி சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார்.

மிகவும் சேதமடைந்த கூரைவீட்டில் பாண்டிமீனா, தனது தங்கையுடன் வசித்து வந்தார். இதுகுறித்து அவர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கோரினார். மேலும், தான் வசிக்கும் கூரை வீட்டை புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, பாண்டிமீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாயையும், தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சம் ரூபாயும் முதற்கட்டமாக வழங்கினார். பின்னர், தன்னார்வலர்களையும் இணைத்து நிதி உதவி கிடைக்கச் செய்தார். பேராவூரணி லன்யஸ் கிளப் சார்பில் சுமார் 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி உதவிகளின் மூலம் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

இதையடுத்து 4-ம் தேதி அன்று காலை பாண்டிமீனாவின் வீட்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், புதிய வீட்டை பாண்டிமீனாளிடம் ஒப்படைத்து, அவரை ரிப்பன் வெட்ட வைத்து, குத்து விளக்கு ஏற்ற வைத்தார். மேலும், பாண்டிமீனாளுக்கும் அவரது தங்கைக்கும் புத்தாடைகளை வழங்கினார்.

இதேபோல், பேராவூரணி ஒன்றியம் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார் (21), விஷ்ணுவர்தன் (17). சகோதரர்கள். இவரது பெற்றோர் கருணாநிதி –சரளா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். பாட்டி ரேணுகா(65), கூலி வேலைசெய்து பேரன்களை கவனித்து வருகிறார்.
ரேணுகாவின் குடிசை வீடு சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது. வீடு இருந்த சுவடே தெரியாத அளவுக்குக் மாறியது. இந்நிலையில், தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு சகோதர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப்பில் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து, அவர்களுக்கு முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தும், தனது விருப்ப நிதி மற்றும் தன்னார்வர்களின் நிதி ஆகியவற்றின் மூலம் சுமார் ரூ. 5 லட்சத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சகோதரர்களிடம் வீட்டை ஒப்படைத்தார்.

இவ்விரு நிகழ்ச்சியிலும், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர்கள் சுகுமார் (பேராவூரணி) ராமச்சந்திரன் (பட்டுக்கோட்டை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button