போலீஸ் செய்திகள்

தமிழக காவல்துறைக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3,200 போலீசார் விரைவில் தேர்வு

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 3,200 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 1,000 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு 444 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி தொடங்கியுள்ளது. இன்னும் 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் 10 சதவீதம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

1956, 1960-ம் ஆண்டுகளில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அதில் இரண்டு வீரர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பது சிறப்புமிக்கது. 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் என்ற காவலர் இந்திய அணியின் சார்பாக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொண்டார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் என்ற காவலர் இந்திய அணி சார்பில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரிலே ஓட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை பெருமைக்குரியதாக தமிழ்நாடு காவல்துறை கருதுகிறது. 2020-ம் ஆண்டு நடந்த மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை போட்டியில் தமிழக காவல்துறை 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் என 14 பதக்கங்களை பெற்று இந்தியாவிலேயே 2-வது இடத்தை பெற்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் மிக அமைதியாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு மிக சரியாக செயல்படுகிறது. சாதி, மத மோதல்கள் இல்லாமலும், சாராயம், கொலை, கொள்ளை போன்றவற்றில் இறப்புகள் எதுவும் இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக இருப்பதற்கு காரணம் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய 1 லட்சத்து 34 ஆயிரம் காவல் துறையை சேர்ந்தவர்களால் தான். அதிலும் ஒரு லட்சம் போலீசார் தமிழக முழுவதும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருவதால் இந்த பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது.

தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சரியான பாதையில் செல்வதால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதற்கான வாய்ப்பில்லை. பல லட்சம் மக்களை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற நிதி நிறுவன உரிமையாளர்களை சர்வதேச போலீஸ் மூலம் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தொழிற்சாலை குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே தேவையின் அடிப்படையில் புதிய போலீஸ் நிலையங்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு டி.ஜி.பி. பரிசு வழங்கினார். விழாவில் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவண சுந்தர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, சிறப்பு காவல்படை ஐ.ஜி. ராதிகா, திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உதவி கமிஷனர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button