போலீஸ் செய்திகள்

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு..! டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு

கோவில்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது, கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவில் விழா குழுவினர், ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு அளித்தால், மாவட்ட எஸ்.பி.,க்கள், கமிஷனர்கள் ஏழு நாட்களுக்குள், மனுவின் மீதான முடிவை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அனுமதி அளிக்கவோ, மறுக்கவோ நடவடிக்கை இல்லை என்றால், விழா குழுவினர், எட்டாவது நாள், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்துவிட்டதாக கருதி நடத்திக் கொள்ளலாம்.

கோவில்களில் திருவிழா தொடர்பான கலாசார நிகழ்ச்சிகள் மட்டுமே நடக்கிறது. ஆபாசமான நடனங்கள் மற்றும் காட்சிகள் இல்லை என்பதை விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சிகள் இரவு, 10:00 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கும், மாண்பிற்கும் இழுக்கு ஏற்படும் வகையில், அவர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ, வேறு ஏதேனும் இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது.

இரட்டை அர்த்தப்பாடல்கள், நிகழ்ச்சியில் இடம் பெறக்கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், மது அல்லது போதை பொருள் வினியோகம் செய்யக்கூடாது.

நிபந்தனைகள் மீறப்பட்டால், அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்கள் மீது, அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கைஎடுக்கலாம்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷன்கள் ஏழு நாட்களுக்குள் அனுமதி அளித்து, விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். இதுபற்றி தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button