போலீஸ் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் : காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் 04.04.2023 அன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தான் நாம் காவல்துறை அலுவலராக நியமிக்கப்பட்டு பலதரப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பாதிப்படையாமல் அவர்களை பாதுகாப்பது நமது முக்கிய கடமையாகும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய முறையில் காலதாமதமில்லாமல் மேற்கொண்டு பாரபட்சமில்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை முற்றிலும் தடுத்து போதைப்பொருள் மற்றும் குற்றமில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறி அதிக வேகமாக செல்பவர்கள், வாகனங்களில் சாகசம் செய்பவர்கள், ரேஸ் வைப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை வேண்டும். நாம் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு நல்லது செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த அறிவுரை கூட்டத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளித்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தர் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் திரு. ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button