போலீஸ் செய்திகள்

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் புதிய மோசடி..! ஏமாற வேண்டாம் எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யை பயன்படுத்தி, உறவினர்கள், நண்பர்கள் குரலில் பேசி மோசடி நடப்பதால், எதையும் உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம்’ என, ‘சைபர் கிரைம்’ பிரிவு ஏ.டி.ஜி.பி., சஞ்சய்குமார் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, ஏ.டி.ஜி.பி., சஞ்சய்குமார் கூறியுள்ளதாவது: சமூக வலைதளங்களில் இருந்து, ஒரு குறிப்பிட்ட நபரின் வீடியோ பதிவு போன்றவற்றின் வாயிலாக, அவரது குரல் மாதிரியை மோசடி கும்பல் எடுத்து கொள்கிறது.

பின், அக்குரல் மாதிரியை, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, ‘குளோனிங்’ செய்து, அவருக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்களை அழைத்து பேசுகின்றனர். இக்கட்டான சூழலில் இருப்பதாகக் கூறி, அழுது கொண்டோ அல்லது கெஞ்சும் தொனியையோ பயன்படுத்துகின்றனர். இதனால், மறுமுனையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. தொடர்ந்து, யு.பி.ஐ., போன்ற முறைகளை பயன்படுத்தி, உடனடியாக பணத்தை அனுப்புமாறு மோசடி செய்பவர் கேட்கிறார். அக்கறையாலும் உதவ வேண்டும் என்ற ஆர்வத்தாலும், கேட்பவரின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் பணத்தை அனுப்பி விடுகின்றனர். பணப்பரிமாற்றம் முடிந்தபின், பணம் கேட்டவரின் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளும் போதுதான், ஏமாற்றப்பட்டது தெரிய வருகிறது.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க, அழைக்கும் நபரின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். அதற்கு, அழைப்பு வந்த புதிய எண்ணை விடுத்து, தன்னிடம் ஏற்கனவே இருக்கும் மொபைல் போன் எண்ணில் அழைத்து, உதவி கேட்பவர் யார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற மோசடிகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள், செய்திகளை பெறும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

‘சைபர் கிரைம்’ மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தால், ‘1930’ என்ற கட்டணமில்லா உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button