போலீஸ் செய்திகள்

போலீஸ், தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 220 பேருக்கு பதக்கம் -: தலைமை செயலாளர், டி.ஜி.பி. வழங்கினர்

தமிழக போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் பதக்கங்கள் (2019, 2020-ம் ஆண்டுகள்) வழங்கும் விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை விழா நடைபெற்றது. விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வழங்கினார். உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரும் பதக்கங்களை வழங்கினர்.

இதில் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், சிறைத்துறை அதிகாரிகள், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் என 220 பேர் பதக்கங்கள் பெற்றனர்.

இதில், 2020-ம் ஆண்டிற்கான தமிழக முதல்-அமைச்சரின் வீரதீர செயலுக்கான போலீஸ் பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் வெகுமதி சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் (தெற்கு) டாக்டர் என்.கண்ணன், அம்பத்தூர் துணை கமிஷனர் ஜெ.மகேஷ், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. செ.அரவிந்த், சென்னை சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு டி.எஸ்.பி. பா.பண்டரிநாதன், சென்னை சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. மு.தாமோதரன், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சு.வீரராஜ், தீயணைப்பு வீரர் செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான போலீஸ் பதக்கம் (2019) சென்னை ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஜனாதிபதியின் மெச்சத்தக்க பணிக்கான போலீஸ் பதக்கம் சென்னை இணை கமிஷனர் (தலைமையிடம்) ச.மகேஷ்வரி, வேலூர் சரக டி.ஐ.ஜி. நா.காமினி, சென்னை சிவில் சப்ளை போலீஸ் சூப்பிரண்டு க.சாந்தி, சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் எம்.எம்.அசோக் குமார் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

தமிழக முதல்-அமைச்சரின் பொதுசேவையில் சீர்மிகு பணிக்கான போலீஸ் பதக்கம் (2020) மற்றும் ரூ.25 ஆயிரம் வெகுமதி, கூடுதல் டி.ஜி.பி. (உயர் பயிற்சியகம்) டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர், சேலம் மாவட்ட எஸ்.பி. டாக்டர் ச.தீபாகனிகர் ஆகியோருக்கும், தமிழக முதல்-அமைச்சரின் சீர்மிகு புலனாய்வுக்கான போலீஸ் பதக்கம் (2020) சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதிக்கும், தமிழக முதல்-அமைச்சரின் சிறந்த நற்பணிக்கான போலீஸ் பதக்கம் (அண்ணா பதக்கம்) திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷா மித்தல், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. ப.அரவிந்தன், ஈரோடு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உள்ளிட்டோருக்கும், தமிழக முதல்-அமைச்சரின் சிறந்த நற்பணிக்கான தீயணைப்பு பணி பதக்கம் (அண்ணா பதக்கம்) சென்னை தீயணைப்புத்துறை துணை இயக்குனர் கு.சத்தியநாராயனுக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் போலீசாரின் கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர்கள் உள்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button