செய்திகள்தமிழ்நாடு

வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் தாய்க்கு வழங்கவேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி..!

கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்து தாய்க்கு வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரது கணவர் திருமலை, தலைமை ஆசிரியராக பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகன் தேசிங்குராஜாவுக்கு, கருணை அடிப்படையில் வாரிசு வேலையாக, தேவனூர் அரசு பள்ளியில் கிளார்க் பணி வழங்கப்பட்டது.

இந்தநிலையில், தன் மகன் தேசிங்குராஜா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வள்ளியம்மாள் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ‘கருணை அடிப்படையில் வேலை பெறும்போது, குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதாக தேசிங்குராஜா உத்தரவாதம் அளித்தார். அதனால் அனைவரும் அவருக்கு வேலை வழங்க ஆட்சேபனை இல்லை என்று கையெழுத்திட்டோம். ஆனால் வேலை கிடைத்ததும், குடும்பத்தைப் பார்க்கவில்லை. அவதூறாக பேசி என்னை அடித்துத் துன்புறுத்துகிறான். இதுகுறித்து போலீசார், கடந்த ஆண்டு அவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனவே, துறைரீதியான விசாரணை நடத்தி அவனை பணியிடை நீக்கம் செய்து, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘மூத்த சகோதரிக்கு அனைத்து தகுதி இருந்தும், இந்த வாரிசு வேலையை தேசிங்குராஜாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர். மனுதாரர் தன் மகனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுபோன்ற உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பிக்க முடியாது. அதையெல்லாம் அரசு உயர் அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும். இருந்தாலும், வாரிசு வேலை பெற்ற மகன் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. எனவே, தேசிங்குராஜாவின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை பிடித்தம் செய்து மனுதாரருக்கு வழங்கவேண்டும். இந்த வழக்கை வருகிற ஜூன் 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்கு உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், தேசிங்குராஜாவும் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button