தமிழ்நாடு

அண்ணா பல்கலை.யில் பேராசிரியர், துணை நூலகர் உட்பட 161 பேருக்கு நியமன ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 161 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில், அதிக உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவது, அதன்மூலம் ஆராய்ச்சி, புதுமை படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பை உறுதி செய்வது, தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, காலி பணி இடங்களை நிரப்புவது போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய 4 கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், உடற்கல்வி துணை இயக்குநர், துணை நூலகர் உள்ளிட்ட பணிகள் காலியாக இருந்தன.

இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுக் குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட 161 பேருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஏப்.20-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட 161 பேருக்கு நியமன ஆணை வழங்கும் அடையாளமாக, 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலர் இறையன்பு, உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன், கூடுதல் செயலர் எஸ்.பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பணியமர்த்தல் பிரிவு இயக்குநர் ஜெ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button