350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
05.11.24-ந்தேதி, கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுரோட்டில் உள்ள வீட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர், சம்பவ இடத்தில் இருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரேவராம் வயது 30/24 த.பெ.லெட்சுமண்ன் மற்றும் கஜானாராம் வயது 34 த.பெ.பரத்ராம் என தெரியவந்தது. மேற்படி இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து குட்கா பொருள்களை கடத்தி வந்து, பாபுரோட்டில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து திருச்சியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் 56 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 240 கிலோ ஹான்ஸ், 10 கிலோ கூல்லிப், 97.500 கிலோ விமல், 2 கிலோ மாணிக்சந்த் என மொத்தம் சுமார் ரூ.3,00,000/- மதிப்புள்ள 350 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருள்கள் விற்பனை செய்ய பயன்படுத்தி வந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2 செல்போன்களை அவர்களிடருந்து பறிமுதல் செய்தும், மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை அதிரடியாக பிடித்த கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி., இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.